Friday, 12 January 2018

பயிற்சியின் போக்கு

தேவை எதுவோ அதைத் திட்டமிடுங்கள்
###########################

5 வருட இடைவெளிக்குப்  பிறகு , ஒரு பயிற்சியில் பங்கேற்பாளராக அமர்ந்து இருந்தேன். சுற்றிலும் 60 ஆசிரியர்கள் , பெண் ஆசிரியர்களே அதிகம் , 10 பேருக்கும் குறைவாகவே ஆணாசிரியர்கள் , கணக்கு பாடம் தொடர்பான பயிற்சி அது .பல பயிற்சிகளுக்கு மாநில அளவில் ஒருங்கிணைப்பு செய்த அனுபவமும் , பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு முன் கருத்துகள் கலந்துரையாடல் செய்து , பல வெற்றிகளைக் கண்ட அனுபவமும் நிறையக் கற்றுக் கொடுத்திருந்தது ,எனக்கு இந்த அறை சற்று கடினமாக இருந்தாலும் இது தானே நிதர்சனம் , காத்திருந்தேன் எனது முறைக்காக .

வழக்கமான கடவுள் வாழ்த்தோடு கருத்தாளர்கள் ஒரு வித பயத்தை ஆசிரியர்களிடம் ஏற்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் பார்வைக்கு வருவார்கள் என்று அடிக்கடி கூறினார். கணக்கு ஆசிரியர்கள் வகுப்பறையில் கற்றல் விளைவுகளை செயல்களின் படி நிலைகளைத் திட்டமிட வேண்டும் என்பதே பயிற்சியின் நோக்கம் , ஆனால் அப்படி ஒரு புரிதலைக் கூட கருத்தாளர்கள் தன் முன் அமர்ந்து இருக்கும் ஆசிரியர்களிடம் பரிமாற்றம் செய்யவில்லை .

ஒரு தலைப்பு -விகிதம் அதை மாணவர்களிடம் புரிய வைப்பதற்கான சில படிநிலைகளைக்  கூறினர். ஆசிரியர்கள் அனைவரும் தொய்வான மனநிலையில் இருந்ததை என்னால் உணர முடிந்தது.

ஒரு கருத்தாளர் வயதில் மூத்தவர் , மற்றொருவர் இளையவர் .... மூத்தவர் வகுப்பு எடுக்கையில் , " எங்களை மாநிலப் பயிற்சியின் போது ,எங்கள எல்லாம் CEO கேட்டாங்க , DE0 வந்தாங்க , அப்படி இருந்தது , ஜென்ட்ஸ் நல்லா பண்ணாங்க எங்களுக்குக் கொடுத்த ட்ரெயினிங்ல , அத சொல்ல சொன்னாங்க , இத சொல்ல சொன்னாங்க என ஒரு மூன்றாம் தர மனிதர்களின் கருத்துகளை இங்குள்ள ஆசிரியர்களுக்குக் கூறும் பணியையே  செய்தார்.

அடுத்து இளையவரின் வகுப்பு ..அவர் நன்றாகவே முயற்சி செய்தார். ஒரு NCERT பயிற்சிக் கட்டகமும்  அனைவருக்கும் தந்து இருந்தனர் . ஒரு intractive Session போல் எடுத்துச் செல்லுங்களேன் என்றேன். அவரும் ஆசிரியர்களை அழைத்தார், ஆனால் ஒருவரும் வருவதாக இல்லை , பார்த்தேன் , நானே எழுந்து சென்று என்னை அறிமுகப்படுத்தி கொண்டு சற்று நேரம் பேசினேன்.

இங்குள்ள ஆசிரியர்கள் அனைவருமே நல்ல ஆசிரியர்கள் , யாரும் உங்கள் பணியில் மனதளவில் தொய்வடைந்திடக் கூடாது. ஒரு மலையில் (உம்) நீலகிரியில் வசிக்கும் குழந்தை கடலைப் பார்த்திருக்காது. சென்னை போன்ற நகரங்களில் வசிக்கும் குழந்தை மலையை அனுபவித்து இருக்காது , ஆனால் எல்லோருக்குமான பொதுவான பாட நூலே நம்மிடம் உள்ளது.

இந்தக் கட்டகம் கூட டெல்லியில் யாரோ 4 ஆசிரியர்கள் அவர்களுக்குத் தெரிந்த விஷயங்களால் எழுதி இருப்பர். இதுவே கற்றலின் இறுதியாகாது. இது போல நம் ஒவ்வொருவரிடமும் இருக்கும் மாணவர்கள் 30 எனில் அதில் 10 வகையான மாணவர்கள் இருப்பார்கள் , அவர்களுக்கு ஏற்றபடியான கற்பித்தல் முறையை பொதுப் புத்தகம் தராது. பாடப்பொருள் மேம்பட்ட ஆசிரியர்கள் நீங்கள் , நம் கல்வி முறை தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நெருக்கினாலும் நமக்கே உரிய பிரத்யேக அணுகுமுறையாலேயே வகுப்பறை வெற்றியடைகிறது என்று கூறி ,

எனது வகுப்பறை அனுபவங்கள் பற்றிப் பகிர்ந்தேன் , நம் மாணவர்களுக்கு நம் வகுப்பறையைத் திட்டமிடுவது , செயல்படுத்துவது எப்படி என்பதை எனது அனுபவங்களைக் கொண்டு சிலவற்றைப் பகிர்ந்தேன் , இன்றைய அசத்தும் அரசுப் பள்ளி  ஆசிரியர்கள் பற்றியும் கூறினேன் .கல்வி அதிகாரிகள் கேள்வி கேட்பது அவர்களது கடமை , ஆனால் நம் மாணவர்கள் பற்றி அவர்களுக்கு எப்படித் தெரியும் ? நம்மிடம் வரும் குழந்தைகள் வீட்டு சூழல் , கற்றல் திறன் இதெல்லாம் நமக்கு தான் தெரியும் , ஆகவே அதற்கு தக்கபடி சமாளிக்கும் ஆற்றல் தான் அவசியம் . 

தொய்வான மனநிலையில் இருந்த ஆசிரியர்களின்  கண்களில் பிரகாசம் வந்தது. மகிழ்ந்தார்கள் , இடை வேளையில் பார்த்து பாராட்டி மகிழ்ந்தார்கள்  . உண்மையைக் கூறியதாக   அதிசயித்தார்கள்,  மெதுவாக ஒவ்வொருவராக தங்கள் வகுப்பறை அனுபவத்தைப் பகிர்ந்தார்கள்  .அன்றைய பயிற்சி தினம் உள்ளபடியே ஆசிரியர்கள் மனதில் உற்சாகத்தைத் தந்தது.

அந்த இரண்டு நாள் பயிற்சியின் Feed back தந்த பொழுது உண்மையை எழுதித் தந்தேன் , இறுதி வரை பயிற்சியின் நோக்கம் குழப்பத்தை விளைவிப்பதாகவே இருந்தது. வகுப்பறையின் இடைவெளிகளை நிரப்புவதாகப் பயிற்சிகள் இல்லை என்று தந்தேன் , உண்மையைக் கூறுங்கள் , மாற்றத்திற்கான முயற்சிகளாவது தொடங்கட்டும் .

ஒருங்கிணைப்பாளர்களே ,பயிற்சிகளைத் திட்டமிடும் போது ஆசிரியர்களது மனதைத் தொய்வடையும்படி கட்டமைக்காதீர்கள்  , வகுப்பறையில் மாணவர்கள் எவ்வாறு வாய் மூடி ஆசிரியர் சொல்வதையெல்லாம் கேட்டால் வகுப்பறை கற்றல் கற்பித்தல் வெற்றியடையாதோ அதே போலத் தான் பயிற்சிகளும் ,கருத்தாளர்கள் சொல்வதெல்லாம் உள் அமர்ந்திருப்பவர் கேட்க வேண்டுமென்றால் பயிற்சியும் வெற்றி பெறாது. இது  SSA வின்  பயிற்சி கற்றல் விளைவு (Learning out Come)

அனுபவம் தொடரும்
உமா,

No comments:

Post a Comment