கணக்குத் தேர்வு அணுகுமுறை
தேர்வு என்றாலே பள்ளிக் குழந்தைகளுக்கு எப்போதும் பயம் தான் ,
இந்த வருடம் பத்தாம் வகுப்பிற்கு புதிய கணக்குப் பாடப் புத்தகம் என்பதால் பொதுத் தேர்வு குறித்து குறிப்பாக கணக்குப் பாடம் குறித்து மாணவர்களுக்கு கூடுதல் பயம் உருவாகி உள்ளது. வருகின்ற மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் வர இருக்கின்றன. முழுப் புத்தகத்தில் உள்ள எல்லாப் பாடப் பகுதிகளும் தேர்வுக்கான பாடப் பகுதிகளே.
எந்த பயமும் இல்லாமல்மாணவர்களாகிய நீங்கள் கணக்குத் தேர்வை எவ்வாறு அணுகலாம் என சில பகிர்வுகளை இங்கு காணலாம்.
இதுவரை கணக்குப் பாடத்தை சரியாகப் படிக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை , இன்றிலிருந்து கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தால் சுலபமாக 75 மதிப்பெண்கள் வரை பெற்று விடும் வழிமுறைகள் கணக்குப் பாடத்தில் உண்டு. புத்தகத்தில் மொத்தம் 8 தலைப்புகள் உள்ளன. அதில் செய்முறை வடிவியல் மற்றும் வரைபடம் ஆகியவற்றில் கடந்த ஆண்டுகளை விட 4 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. 20 மதிப்பெண்களுக்கு பதிலாக 16 மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. இந்த இரண்டு பகுதிகளிலும் கவனம் செலுத்தி பயிற்சி செய்தால் 16 மதிப்பெண்கள் முழுமையாகப் பெற்று விடலாம். இதில் வரைபடக் கணக்கில் படம் , அளவுத் திட்டம் , அளவுகள் சரியாகக் குறிக்கப்படுதல் மற்றும் அட்டவணை மதிப்புகள் இவற்றை சரியாகச் செய்தால் 8 மதிப்பெண்கள் பெற முடியும்.
செய்முறை வடிவியல் பகுதியில் உதவிப் படம் சரியாக வரைந்தால் 2 மதிப்பெண்களும் உண்மைப் படம் சரியாக வரைந்து அளவீடுகள் சரியாகக் குறித்து பெயரிட்டு முழுமையாக்கினால் மீதமுள்ள 6 மதிப்பெண்கள், ஆக முழுமையான 8 மதிப்பெண் பெற்று விடலாம்.
ஆனால் கடந்த ஆண்டுகள் போல் தனித்தலைப்புகளில் இவையிரண்டும் வருவதில்லை. வரைபடங்கள் இயற்கணிதம் என்ற தலைப்பிற்குள்ளும் , செய்முறை வடிவியல் என்ற தலைப்பு வடிவியல் என்ற பாடத் தலைப்பிற்குள்ளும் அடங்கியுள்ளன.
தினந்தோறும் 15 நிமிடங்கள் செலவிட்டு மேற்சொன்ன 2 தலைப்புகளிலும் உள்ள புத்தகக்கணக்குகளை போட்டுப் பார்த்துப் பயிற்சி செய்தால் பொதுத் தேர்வுக்குள் தயாராகி விடலாம்.
அடுத்து , 8 பாடத் தலைப்புகளிலும் ஒவ்வொரு பாடத் தலைப்பின் இறுதியிலும் ஒரு மதிப்பெண் வினா விடைகள் 15- 20 எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஒரு மதிப்பெண் வினா - விடை பகுதிகளை தினமும் படித்து , செய்து பார்த்து சிறு தேர்வு போல எழுதி வந்தால் 15 மதிப்பெண்கள் நிச்சயமாகப் பெற்று விடலாம். இதுவரை குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 க்கு இவை போதுமானது. ஆனால் இன்னும் கூடுதல் நேரம் ஒதுக்கினால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.
எளிய பகுதியும், ஜூன் மாதம் முதல் மாணவர்கள் திரும்பத் திரும்ப கவனம் செலுத்தும் பகுதி - உறவுகளும் சார்புகளும், இதில் எடுத்துக் காட்டு கணக்குகள் , நிரூபணங்கள் ஆகியவற்றைத் திரும்பத் திரும்ப செய்து பார்க்க வேண்டும் .
அதனைத் தொடர்ந்து மாணவருக்கு எளிதான பகுதியும் மதிப்பெண் பெறக் கூடியதும் அணிகள் , இதில் மிக எளிமையான பயிற்சிக் கணக்குகளும் எடுத்துக் காட்டுகளும் உள்ளன. இத் தலைப்பில் சற்று பயிற்சி செய்தால் எளிதில் மதிப்பெண்கள் கூடும். இதுவும் இந்த வருடம் தனித் தலைப்பில் வரவில்லை. இயற்கணிதம் என்ற தலைப்பில் இணைந்து தான் வருகிறது. ஆனால் அதிலுள்ள காரணிகள் , வர்க்க மூலம் , பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பெ.வ , மீ.சி.ம , பல்லுறுப்புக் கோவைகளின்
வர்க்க மூலம் கண்டறிதல் ஆகியவை மிக எளிய முறையில் பயிற்சி செய்யக் கூடியவையே.
அதோடு இரண்டாம் தலைப்பாக வரும் எண்களும் வரிசைகளும் தலைப்பில் ,மட்டுக் கணிதம் , கூட்டுத் தொடர் வரிசை , பெருக்குத் தொடர் வரிசை குறித்த கணக்குகளை உரிய சூத்திரங்களை நினைவில் கொண்டு தொடர்ச்சியாகப் பயிற்சி பெற இந்தப் பகுதி எளிதாகும்.
அடுத்ததாக ஆயத் தொலை வடிவியல் என்ற தலைப்பில் , முக்கோணத்தின் பரப்பு , நாற்கரத்தின் பரப்பு , சாய்வு , இணை கோடு செங்குத்துக் கோடுகள் ,கோட்டின் சமன்பாடுகள் இவற்றைப் பயிற்சி செய்யலாம் ..
அதோடு அளவியல் தலைப்பில் வளை பரப்பு , கனஅளவு , மொத்தப் பரப்பு - கூம்பு , உருளை, கோளம் இவற்றில் பயிற்சி செய்து பார்க்கலாம் , இந்தப் பகுதியைப் பொருத்த வரை 23 சூத்திரங்கள் உள்ளன . இவற்றை ஒரு மாணவர் தெளிவாகப் புரிந்து கொண்டு கணக்குகளை செய்து பார்ப்பது எளிய முறையில் மதிப்பெண் பெற வழி வகுக்கும்.
இத் தலைப்பையும் மேற்சொன்ன தலைப்புகளையும் நன்றாகப் பயிற்சி செய்யும் ஒரு மாணவர் எந்தத் தடங்கலும் இன்றி 60 மதிப்பெண்கள் வரைப் பெறலாம்
அடுத்து நிகழ்தகவு , புள்ளியியல் இவ்விரு தலைப்புகளிலும் கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக் காட்டுகள் , பயிற்சிக் கணக்குகளையும் சேர்த்து தயாராகும் போது 70 மதிப்பெண்களைக் கடந்த நிலையில் வெற்றி பெறலாம்.
அடுத்து வடிவியல் தலைப்பு, இதில் தான் செய்முறை வடிவியலும் இடம் பெற்றுள்ளது. , அதோடு பிதாகரஸ் தேற்றம் , தேல்ஸ் தேற்றம் ,எடுத்துக் காட்டுக் கணக்குகள் , தொடு கோட்டின் நீளங்கள் இதற்கானப் புரிதலும் கணக்குகளும் பயிற்சி செய்ய வேண்டும்.
அடுத்ததாக நிகழ்தகவும் புள்ளியியல் என்ற கடைசித் தலைப்பு எளிதான பகுதி தான். இதிலுள்ள கணக்குகள் தொடர்ந்து செய்து பார்க்கலாம். அடுத்து முக்கோணவியல், இந்தத் தலைப்பை மாணவர் ஏனோ மிகக் கடினமாக உணர்கின்றனர். ஆனால் இயல்பாக அடிப்படை கருத்தை மாணவர் மனதில் புரிய வைத்தால் இதை விட எளியது எதுவுமில்லை என்பர்.
மற்றொன்று ஏற்கனவே இயற்கணிதம் , முக்கோணவியல் , அணிகள் போன்ற தலைப்புகளில் 9 ஆம் வகுப்பில் அடிப்படைப் புரிதலுடன் வருவதால் மிக எளிமையாகக் கணக்குத் தேர்வைக் கையாளலாம்.
இவ்வாறு ஒரு மாணவர் இனிவரும் டிசம்பர் முதல் மார்ச் வரை 4 மாத காலம் தலைப்பு வாரியாகப் பயிற்சி செய்து வந்தால் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை எளிதாகப் பெற இயலும்.
மாணவர்கள் தினமும் 2 மணி நேரம் கணக்குப் பாடத்திற்கு ஒதுக்குவது நல்ல மதிப்பெண் பெற வழி வகுக்கும். ஆம் அந்த நேர உழைப்பு அவர்களுக்குள் வேகத்தையும் தெளிவும் தரும் ,தேர்வை மிக இயல்பாக அணுக முடியும். முதலில் கணக்குப் பாடத்தை விரும்ப வேண்டும்.
ஒவ்வொரு முறை போட்டுப் பார்க்கும் போதும் சிக்கல் தீரும் , என்றுமே கணக்கை மனப்பாடம் செய்யக் கூடாது. படங்கள் ,குறியீடுகள் இவற்றைப் போட்டுப் பார்த்து சுயமாகப் புரிந்து கொள்ள முயல வேண்டும் ,
கணக்கின் மற்றொரு சிறப்பு இப்பாடத்தில் மட்டும் தான் சரிபார்த்தல் செய்ய முடியும் , ஆகவே மாணவர் ஒரு கணக்கை தேர்வு விடைத்தாளில் போட்ட பிறகு அதன் வலப்பக்கத்தில் ஏற்கனவே போட்டுக் கொள்ளும் Rough work பகுதியில் சரிபார்த்தல் போட்டுப் பார்ப்பது நல்லது. தேர்வறையை விட்டு வெளியே வரும் முன்னரே தான் எத்தனை மதிப்பெண் வாங்குவோம் என தெரிந்து விடும்.
ஒவ்வொரு முறை கணக்கைப் போடும் போதும் 3 விஷயங்களை கவனிக்க வேண்டும். அவை , என்ன கொடுக்கப்பட்டிருக்கிறது ? என்ன கண்டறிய வேண்டும் ? அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் ? இந்த மூன்றையும் யோசித்தால் எந்த ஒரு சிக்கலான கணக்கையும் எளிதாகத் தீர்த்து விடலாம்.
வழிகள் தெளிவாகவும் , எண்களை சரியாகவும் குறிப்பிடப்பட வேண்டும். அளவியல் பகுதி வரும் போது மீ , செ.மீ ,ச.மீ இது போன்ற அலகுகளை மறக்காமல் எழுத வேண்டும் .
பெருக்கல் , வகுத்தல் , சுருக்குதல் செயல்களை ஏற்கனவே கூறியபடி Side work - Rough work என்ற பகுதியில் போட்டுப் பார்த்து தவறில்லாமல் எடுத்து விடைகளை எடுத்து எழுத வேண்டும்.
அடித்தல் ,திருத்துதல் இருக்கக் கூடாது. நேர மேலாண்மையில் பயிற்சி செய்து இருக்க வேண்டும் , கேட்கப்பட்ட வினாக்களின் எண்ணிக்கைக்கு அதிகமாகப் போடக்கூடாது. தேர்வு வினாத்தாள் கணக்கு எண்ணை விடைத்தாளில் எழுதும் போதும் மாறாமல் எடுத்து எழுத வேண்டும். கணக்கு எண் போடாமல் கணக்கை விடைத்தாளில் செய்யக் கூடாது.
அளவுகோல் , பாகை மானி இவற்றைப் பயன்படுத்தும் போது கவனமாக மதிப்புகளைப் போட வேண்டும் , பிழை செய்யக் கூடாது.
இவ்வாறு ஒரு 10 ஆம் வகுப்பு மாணவர் தன்னை சரியான முறையில் பயிற்சி செய்து கொண்டால் எளிதாக மதிப்பெண்கள் பெறலாம்.
கணக்கு கடினம் , எனக்கு வராது , என்னால் போட முடியாது என்ற எதிர்மறை எண்ணங்களைத் தூர எறிந்து விட்டு கடுமையான பயிற்சி செய்தால் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறலாம்.
கணக்குத் தேர்வைப் பொறுத்தமட்டில் பயமோ பதட்டமோ தவிப்போ அர்த்தமற்றது. எளிதாகக் கையாளலாம் , இவ்வாறு மாணவர் தங்களை தகவமைத்துக் கொண்டால் கணக்குப் பாடத் தேர்வு மட்டுமல்ல எல்லாப் பாடத் தேர்வுகளுமே அவர்களுக்கு மிக எளிதே
உமா