தேர்வின் மையம் என்ன ? ஏன் எதிர்ப்பு தோன்றுகிறது ? விவாதிப்போம்
கடந்த 4 நாட்களாக 5 , 8 வகுப்புகளுக்கான தேர்வு பற்றிய எதிர்ப்புக் குரல்கள் முகநூலில் வலம் வருகின்றன .
இந்த வருடம் பொதுத் தேர்வு கிடையாது என்று பேட்டி அளித்துள்ளார் கல்வி அமைச்சர் .
சரி , இது இப்படி போகட்டும் .
மிகச் சிறந்த கல்வி முறை என நாம் கூறும் பின்லாந்து கல்வி முறையில் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா என ஒரு முறை விசாரித்துப் பார்ப்போம் .
அங்கு 7 வயசுல தான் குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்கிறாங்க , இங்க மாதிரி இரண்டரை வயதில் பள்ளிக்குள் தள்ளப்படுவதில்லை.
மதிப்பெண் அடிப்படையில் மற்ற குழந்தைகள் ஒப்பிடப்படுவதில்லை. தரப்படுத்தப்படும் தேர்வு முறை இல்லை. ஆரம்பக் கல்வி என்பது வெறும் ஏட்டுக் கல்வியில் கிடைக்கும் வெற்றி அல்ல என்று பின்லாந்து கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
அப்போ நம் நாட்டு கல்வியாளர்கள் இந்தக் கருத்துகளில் முரண்படுகிறார்களா ????
இங்குள்ள கல்வி ஆராய்ச்சி நிறுவன ( SCERT) Experts என்ன செய்யறாங்க ? இவர்கள் இதற்கான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்து இருக்க வேண்டும் அல்லவா ?
கல்வித் துறையில் குழந்தைகள் பிரிவில் , உளவியல் பிரிவில் ஆய்வு முனைவர்கள் முதல் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாமா ??
NCF 2005 தேசியக் கல்விக் கொள்கையின்படி இப்படியான தேர்வுகள் கண்டனத்துக்கு உரியவை .
கல்விக் கொள்கைகள் வழியாகவும் சரி , குழந்தை உளவியல் வழியாகவும் சரி இந்தத் தேர்வு முறை & தேர்ச்சி கான்சப்ட் என்பது தவறு தான் ....
ஏன் தவறு ?
நமது நாட்டில் எலைட் குடும்பங்கள் ஒரு புறம் இருந்தாலும் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குழந்தைகளும் , நடுத்தர வர்க்க குடும்பங்களில் சிலரும் தான் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர்.
இந்தக் குழந்தைகளை தேர்ச்சி இல்லை என அறிவிக்க பல காரணங்கள் பள்ளிகளுக்கும் நிர்வாகத்திற்கும் இருக்கும். ஆனால் நிர்வாகம் , என்றுமே தனது பார்வையை எதார்த்த மனநிலையின் பக்கத்திற்கு திருப்பாது.
விளைவு , வீட்டில் படிப்பை பற்றி கவனம் செலுத்த ஆளில்லாத , பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்படும் குடும்பங்களின் குழந்தைகள் fail என்ற ஒற்றைச் சொல்லால் , பள்ளியின் மொத்த கேலிக்கும் ஆளாக நேரிடும் , தொடர்ச்சி பள்ளியில் இடைநிற்றல் (Drop out)உருவாகும். குழந்தைகள் மகிழ்ச்சி அறவே பிடுங்கப்படும் , குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை உயரும் , சமூகம் மீண்டும் ஒரு தலைமுறை முன் சென்று 30 வருடம் முன்புள்ள சூழல் வர வாய்ப்பு இருக்கு ,
குழந்தைகளின் படைப்பாற்றல் அழியலாம் , மன அழுத்தம் ஆசிரியர்கள் வழியாகக் குழந்தைகளுக்குக் கடத்தப்படலாம் ,
ஆசிரியர்கள் மீண்டும் ஒரு பிரிவில் ஆவணப்படுத்த ( ரெக்கார்டுகள் ) நெருக்கப்படலாம். ஆசிரியர்கள் நிர்வாகத்தை சரிப்படுத்தும் விதமாக போலி ஆவணம் தயாரிக்கும் சூழலுக்குச் செல்லலாம்.
சிறந்த ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகலாம் , தலைமை ஆசிரியர்கள் அச்சுறுத்தப்படலாம், இதனால் தேர்வுக்கான விடைகளை கரும்பலகையில் (Board) எழுதிப் போடலாம் ..... (80 களில் இப்படி நடக்கும் )
நோட்ஸ் போடுபவர்கள் பணம் கொழிக்கலாம் , டியூஷன் சென்டர்கள் அதிகமாகலாம் , புத்தக வாசிப்பு , விளையாட்டு இப்படியான சிறு சிறு முயற்சிகள் தோல்வி அடையலாம். நீட் தேர்வுக்கு முயற்சி செய்யும் மிகக் குறைந்த அரசுப் பள்ளிக் குழந்தைகள் செய்யாமல் போகலாம் .
எல்லோரும் தனியார்ப் பள்ளிகளை நாடலாம் .யார் கண்டது ??? அரசுப் பள்ளிகள் அனைத்தும் விரைவில் மூடப்படலாம்.
இப்படி இன்னும் பல ......'லாம் 'கள் உருவாகலாம் .
சரி .. மாற்று என்ன செய்யலாம் ?
பள்ளிகளில் போலி Records ஐ ஒழிக்கலாம் , அதிகாரிகள் நேரடியாக மாணவரை அணுகி ஆய்வு என்ற பெயரில் இல்லாமல் இயல்பாக கண்காணிக்கலாம் .
முதல் 2 வகுப்புகளிலேயே எழுதப் படிக்க அடிப்படைத் திறன்களை மொழிப் பாடத்திலும் கணக்கிலும் கொண்டு வர நேரடியாக ஆசிரியர்களை செயல்பட வைக்கலாம் .
மக்களை , பெற்றோரை , SMC ஐப் பயன்படுத்தி கற்பித்தல் சரியில்லை எனில் கேள்வி கேட்க வைக்கலாம் . எவ்வித மறைவும் இன்றி ஒரு வெளிப்படைத் தன்மையை (transparency) பள்ளிக்கும் சமூகத்துக்கும் உருவாக்கலாம். கற்பித்தலை சரியாக எடுத்துச் செல்லாத ஆசிரியரை தண்டித்து அச்சுறுத்தாமல் கண்டித்து வழிகாட்டலாம்.
ஆசிரியர்களை கற்பித்தல் பணிக்கு மட்டும் ஈடுபடுத்தி (தேர்தல் பணி செய்யலாம் ) மற்ற பிற எல்லா அலுவலகப் பணிகளிலிருந்தும் விடுதலை செய்யலாம் ,
மாணவரை உண்மையான கற்பித்தலுக்கு ஆட்படுத்தி கற்றலை விளைவிக்கும் ஆசிரியர்களுக்கு திறன் அடிப்படையில் மட்டும் ஊக்க ஊதியம்(incentive) வழங்கலாம்.
இது போன்ற நடைமுறைகள் சட்டமாக்கப்படலாம் , இவற்றில் எவ்விதமான சமரசமும் இருக்கக் கூடாது. முதலில் கல்வி அதிகாரிகள் நிர்வாக சம்மந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே தலையிட்டு பணி செய்யாமல் கல்வி செயல்பாடுகளிலும் ( academic Side ) தொடர்ச்சியான ஆரோக்கியமான தலையீட்டை ஈடுபடுத்த வேண்டும்.
சங்கங்கள் பரிந்துரையால் (தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு ) எந்த சலுகைகளையும் அரசும் கல்வி அதிகாரிகளும் தரக்கூடாது. நிர்ப்பந்தங்களுக்கு பயப்படாமல் தன் அறம் சார்ந்து அனைவரும் இயங்குதல் வேண்டும்.
அப்படியான சூழலில் குழந்தைகளுக்கு தேர்வோ தேர்ச்சி அறிக்கையோ தேவையில்லை.
மகிழ்ச்சியான சுதந்திரமான இயல்பான கற்றல் குழந்தைகளுக்குக் கிடைக்கும்
பேசுவோம்
உமா
No comments:
Post a Comment